Saturday, 2 September 2017

வலியிலும் தேர்வு எழுதிய அனிதா: நினைவுகளை பகிர்ந்துகொண்ட தோழி


அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்ற ஏழை மாணவி சிறு வயது முதலே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கல்வி பயின்று வந்தார்.

ஆனால், நீட் எனும் தேர்வு அவரது கனவை சிதைத்துவிட்டதால் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.

கூரை வீட்டில் குடியிருந்த போதும், மருத்துவராக வேண்டும் என்ற உன்னத லட்சியத்துடன் அனிதா படித்தார். தங்கள் சகோதரியின் எண்ணம் மகிழ்ச்சியை தந்தாலும், அதற்கான வசதிகள் இருக்கிறதா? என்ற ஏக்கம் அவருடைய சகோதரர்களிடம் இருந்துள்ளது.

ஆனால் தன் படிப்பின் மீதுள்ள நம்பிக்கையால், நல்ல மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் இடம்பெற்று விடுவேன், என்பதே அனிதாவின் நம்பிக்கை வார்த்தையாக இருந்துள்ளது.


தங்கள் சகோதரியின் கனவு ஈடேற அவருடைய சகோதரர்களும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று, சம்பாதித்து அவருடைய படிப்புக்கு உறுதுணையாக இருந்தனர்.

ஆனால், அனைத்தும் தற்போது வீண்போய்விட்டது. அனிதான் தந்தை சண்முகம் கூறியத்வது, சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் அனிதா படித்தாள். கூலி வேலைக்கு சென்று, அனிதாவை டாக்டராக்கி விட வேண்டும் என்பதில் நானும், எனது மகன்களும் உறுதியாக இருந்தோம்.

இந்த ஊரிலேயே நன்றாக படிக்கும் பெண் என்ற பெயர் வாங்கும் அளவுக்கு அனிதா படித்தாள். பிளஸ்-2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களால் தன்னுடைய கனவு ஈடேறிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தாள். ஆனால் நீட் தேர்வால் அந்த கனவு கலைந்ததோடு, அவருடைய உயிரையும் பறித்து விட்டது.

நீட் தேர்வு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்திருக்கும். அதனை கெடுத்து விட்டார்கள். கால்நடை மருத்துவம் படிக்க வந்த வாய்ப்பை அனிதா விரும்பவில்லை.

இதுகுறித்து எங்களிடம் எதுவும் பேசாமல் விரக்தியிலேயே இருந்தாள். மனதுக்குள் புழுங்கி தவித்த அனிதா இப்படியொரு முடிவை எடுத்துவிட்டாள்.

இதனால் மருத்துவராக பார்க்க வேண்டிய மகளை, மரண கோலத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டு விட்டது. நீட் தேர்வினாலேயே இந்த நிலை ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

மாணவி அனிதாவுடன் 10-ம் வகுப்பு வரை படித்த தோழி இலக்கியா கூறுகையில், அனிதா சிறுவயது முதலே படிப்பில் ஆர்வமாக இருந்தார். 10-ம் வகுப்பு தேர்வு சமயத்தில் மொபட்டில் செல்லும் போது, கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.

அந்த வலியிலும் தேர்வு எழுதி 479 மதிப்பெண்கள் எடுத்தார். இதே போல் பிளஸ்-2 தேர்விலும் 1,176 மதிப்பெண்கள் எடுத்தார். இவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தும் கர்வம் இல்லாமல் அனைவருடனும் சகஜமாக பழகுவார்.

அவரது சகோதரர்களின் வழிகாட்டுதலின் பேரில் நீட் தேர்வு சம்பந்தமாக நீதிமன்றம் வரை சென்று போராடினார் என கூறியுள்ளார்.



No comments:

Post a Comment